கல்வி

வளர் தமிழ்ப் பாடநூல்கள்

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பாடநூல்கள் வளர் தமிழ்ப் பாடநூல்கள் என்னும் பெயரில் ஆக்கப்படுகின்றன. பிரான்சு, பிரித்தானியா, யேர்மன், பெல்சியம், நோர்வே, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன், அவுத்திரேலியா, நியூசிலாந்து, கனடா, பின்லாந்து, மொரிசியசு ஆகிய நாடுகளில் உள்ள கல்விக்கழகங்கள் வளர் தமிழ் நூல்களையே பயன்படுத்துகின்றன.

மழலையர் நிலை தொடக்கம் மாணவர்களின் அகவை நிலைக்கேற்றவாறு படிப்படியான வளர்ச்சிகளைக் கொண்டு ஆக்கப்பட்டு வளர் தமிழ் 12 வரையான பாடநூல்கள் பயிற்சி நூல்கள், வாசித்தல் நூல்கள், கட்புலவளநூல், பேசுதல் நூல், இலக்கணம் கற்றல்வளநூல், அருஞ்சொற் பெட்டகம் என்ற அழகான கட்டமைப்புடன் வளர் தமிழ் பாடநூல்கள் அமைந்துள்ளன.

valartamil-malalaikalnilai
valartamil-malalaikalnilai-payirchi
valartamil-palarnilai-padanool
valartamil-palarnilai-eluthuthal
valartamil-1
valartamil-1-eluthuthal
valartamil-2-padanool
valartamil-2-eluthuthal
valartamil-4
valartamil-4-eluthuthal
valartamil-5
valartamil-6
valartamil-7-payilal
valartamil-8-eluthuthal
valartamil-9
valartamil-10
valartamil-11
valartamil-12
previous arrow
next arrow
valartamil-malalaikalnilai
valartamil-malalaikalnilai-payirchi
valartamil-palarnilai-padanool
valartamil-palarnilai-eluthuthal
valartamil-1
valartamil-1-eluthuthal
valartamil-2-padanool
valartamil-2-eluthuthal
valartamil-4
valartamil-4-eluthuthal
valartamil-5
valartamil-6
valartamil-7-payilal
valartamil-8-eluthuthal
valartamil-9
valartamil-10
valartamil-11
valartamil-12
previous arrow
next arrow
 • மழலையர்நிலை
 • பாலர்நிலை
 • வளர் தமிழ் 1
 • வளர் தமிழ் 2
 • வளர் தமிழ் 3
 • வளர் தமிழ் 4
 • வளர் தமிழ் 5
 • வளர் தமிழ் 6
 • வளர் தமிழ் 7
 • வளர் தமிழ் 8
 • வளர் தமிழ் 9
 • வளர் தமிழ் 10
 • வளர் தமிழ் 11
 • வளர் தமிழ் 12

  வரை உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நூல்கள் நான்கு அகவையுடைய பிள்ளைகளுக்கான மழலையர்நிலை தொடக்கம் பாலர்நிலை, வளர் தமிழ் 1 எனப் படிப்படியாக நகர்ந்து வளர் தமிழ் 12 வரையான பாடநூல்களையும் அவற்றுக்கான பயிற்சி நூல்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

பாடநூல்கள் என்பது கற்பித்தலுக்கான ஒரு கருவியாகும். வளர் தமிழ் பாடநூல்கள் வாழிடநாட்டுப் பள்ளிகளின் கல்வித் திட்டத்திற்கு அமைவாக அமைந்துள்ளன. இப்பாடத்திட்டத்தினூடாக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மொழியை மட்டுமன்றித் தமிழர்களின் கலை, பண்பாட்டு விழுமியங்களையும் தமிழ் மாணவர்கள் கற்றுக் கொள்ள வழிசமைத்துள்ளது.

பட்டயக் கல்வி நூல்கள்

மேலும் வளர் தமிழ் 12 வரை கற்று முடித்த மாணவர்கள் தமிழ் கற்றலை நிறுத்தி விடாது அதே தடத்தில் பயணிக்கும் வகையில் வளர் தமிழ் 12 இன் தொடர்ச்சியாக ஈராண்டுக் கற்கை நெறியைக் கொண்ட பட்டயக்கல்விக்கான பாடநூல்களையும் த.க.மே.பேரவை வடிவமைத்துள்ளது. (முதலாம் ஆண்டுக்கென 7 நூல்களும் இரண்டாம் ஆண்டுக்கென 7 நூல்களும் ஆக்கப்பட்டுள்ளன. )

அத்துடன் இப்பட்டயக்கல்வி கற்கை நெறியைத் தாயகத்தில் பல இடர்களின் மத்தியில் தமது உயர்கல்வியைத் தொடரமுடியாது புலம்பெயர்ந்து வந்து இங்கு ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்களும் பயன்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மொத்தத்தில் நாம் தாயகத்தில் கற்றது நிறைவான தமிழ் அல்ல. “இதுவன்றோ தமிழ்!” என்று பலரும் வியந்து திரும்பிப் பார்க்கும் வகையில் த.க.மே. பேரவையால் ஆக்கப்பட்ட 47 நூல்களும் தமிழரின் மொழி, பண்பாடு, இனம், வரலாறு என்ற தூய கட்டமைப்புடன் பயணிக்கின்றன.

இப்பாடநூல்களுடன் நின்றுவிடாமல்…

கட்புலவளநூல் : பிள்ளைகளின் எழுத்தாக்கத் திறனையும் நற்றமிழில் பேசும் திறனையும் வளர்க்கும் பொருட்டு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பொருட்களின் தூயதமிழ்ச் சொற்கள் அவற்றின் படங்களின் உதவியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாகப் பெயர்களையும் அவற்றுக்கான செயல்களையும் (பெயர், வினை) இலகுவாக அறிந்து கொள்ளவும் சொல்லியத்தில் அடைமொழிகளின் பயன்பாட்டையும் திணை, பால், எண், இடம், காலம் என்பவற்றையும் உள்ளடக்கிய அடிப்படை இலக்கணத்தைப் படிப்படியாகவும் இலகுவாகவும் நகர்த்தி, வளர் தமிழ் 4 வரையான எழுதுதல் செயற்பாட்டுற்கு உதவும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது.

வாசித்தல் நூல் : மொழியின் ஒரு திறனான வாசித்தலை மாணவரிடையே வளர்க்கும் நோக்குடன் வகுப்பு நிலைகளுக்கு ஏற்ற வகையில் படிமுறை வளர்ச்சியுடன் கூடிய மூன்று தொகுதி வாசித்தல் நூல்கள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் ஆக்கஞ்செய்யப்பட்டுள்ளன.

 • வளர் தமிழ் 1-4
 • வளர் தமிழ் 5-8
 • வளர் தமிழ் 9-12 என அம் மூன்று தொகுதி நூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

எழுத்துகளை இனங்கண்டு சொற்களைப் பலுக்கி எளிதாக வாசிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்நூல்கள் வெறுமனே வாசித்தல் என்பதை மட்டும் கொண்டிராது இலக்கியம், வரலாறு, அறிவியல் சார்ந்த பல செய்திகளையும் தன்னகத்தே கொண்டு வாசிப்போர் மனதில் நற்கருத்துகளை விதைக்கும் அறிவுப் பெட்டகமாகவும் அமைந்துள்ளன.

கற்றல்வள இலக்கண நூல் : தமிழ்மொழியின் கட்டமைப்பினைப் பேணும் வகையில் தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றில் நூற்பாக்களாகச் செய்யுள் வடிவில் அமைந்துள்ள இலக்கணத்தை நன்கு புரிந்து கொண்டு வளர் தமிழ் 6-12 வரையான வகுப்புகளுக்கு கற்பித்தல் செய்யும் ஆசிரியர்கள் இலக்கணம் கற்பித்தலை இலகுபடுத்தும் பொருட்டு தேவையான இலக்கணப் பகுதிகளை எளிமையாகவும் காலத்திற்கு ஏற்ற மொழிநடையிலும் மொழியின் வரம்பு கெடாமல் ஆக்கம் செய்யப்பட்ட அரிய நூலாக கற்றல்வள இலக்கண நூல் அமைந்துள்ளது. மேலும் இந்நூலானது வளர் தமிழ் 11-12 கற்கும் மாணவர்களும் பட்டயக்கல்வி கற்கும் மாணவர்களும் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அருஞ்சொற்பெட்டகம் : என்ற நூல் காலச் சூழ்நிலைகளினால் தமிழில் கலந்துள்ள வேற்றுமொழிச் சொற்களைக் களைந்து அவற்றுக்கு ஒப்பான அருந்தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து செழுமை வாய்ந்த தமிழ்மொழியில் நிறைந்திருக்கும் கருத்தாழம் மிக்க அருஞ்சொற்களை (எம்மினம்) மாணவர்கள் அறிந்து கொள்ளவும் மாணவர்களின் தமிழறிவினை மேம்படுத்தும் நோக்கில் மொழிவளத்தையும் கொண்டு ஆக்கப்பட்ட நூலாகும்.

மேலும் சமய, இன, வேறுபாடுகள் அற்ற அரசியல் சாராத வகையில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பாடநூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக் கற்றல் வள நூல்கள் 14 நாடுகளில் உள்ள கல்விக்கழகங்களுக்கும் அனுப்பப்படுகின்றது. கல்விக் கழகங்கள் நூல்களைப் பெற்று அந் நாட்டின் வாழும் தமிழ்கற்கும் பிள்ளைகளுக்கு வழங்கி தமிழ்மொழியை ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கின்றனர்.

தேர்வு நிலைகள்

அரையாண்டுத்தேர்வு

மாதிரி வினாத்தாள் ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் இறுதிச் சனிக்கிழமை நடைபெறுகிறது. அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள்; தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவையினாலே அணியஞ் செய்யப்பட்டு கல்விக் கழகங்களிற்கு அனுப்பப்படுகின்றது. அதன் பிற்பாடு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் இலகுபடுத்தும் பொருட்டு மாதிரி வினாத்தாள்களுக்கான விடைகளும் புள்ளித் திட்டங்களும் அனுப்பப்படுகின்றன.

புலன்மொழி வளத்தேர்வு

listen-tamiledc
communication-tamiledc

ஒரு மொழியில் ஆளுமை என்பது கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்னும் நான்கு திறன்களினாலும் நிறைவு பெறுகின்றது. பேரவையின் பாடநூல்களும் பயிற்சி நூல்களும் ஒலிவட்டுகளும் இத்திறன்களை வளர்க்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. பேரவையின் வழிகாட்டலின் கீழ்ப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் தேர்வு நடத்துநருக்கான பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகின்றது. கல்வியாண்டின் இறுதியில், வகுப்பு நிலைகள் 1 தொடக்கம் 12 வரையுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக நேரம் கொடுக்கப்பட்டு கேட்டல், பேசுதல், வாசித்தல் திறன்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுக்கான புள்ளிகள் புலன்மொழித்தேர்வு வளர் தமிழ் 1 முதல் வளர் தமிழ் 12 வரை நடைபெறுகின்றன. கேட்டலுக்கு ஒலிவட்டும், பேசுதலுக்கு பேசுதல் பகுதியும் வாசித்தலுக்கும் வாசிக்கும் பகுதி கல்விமேம்பாட்டுப் பேரவையினால் அணியஞ் செய்யப்பட்டு அந்தந்தக் கல்விக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

புலன்மொழி வளத்தேர்வு நடைமுறைகள்

பேசுதலுக்கு வளர் தமிழ் 1, 2 வகுப்புகளுக்கு படம் கொடுக்கப்பட்டு வினாக்கள் கேட்கப்படும். வளர் தமிழ் 3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு பேசுதல் நூலில் இருந்து தலைப்புகள் கொடுக்கப்பட்டு வினாக்கள் கேட்கப்படும், வளர் தமிழ் 6 முதல் 12 வரை தலைப்புகள் கொடுக்கப்பட்டு அவை தொடர்பாகப் பேசவேண்டும். தலைப்புகள் இரண்டு பிரிவுகளாக இருக்கும். பாடநூல் தலைப்பு, பொதுத் தலைப்பு என இரு தெரிவுகள் இருக்கும். அவர்கள் இரண்டு தலைப்புகளில் ஒன்றைத் தெரிவுசெய்து பேசவேண்டும். வகுப்புகளுக்கு ஏற்ப பேசும் மணித்துளிகள் மாறுபடும். சில வகுப்புகளுக்கு 2 மணித்துளிகளும் சிலவகுப்புகளுக்கு 3 மணித்துளிகளும் பேசுதலுக்குக் கொடுக்கப்படும். புலன்மொழித்தேர்வுப் புள்ளிகள் எழுத்துத் தேர்வுப் புள்ளிகளுடன் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கான புள்ளிகள் மொத்தமாக வழங்கப்படும்.

கேட்டல், பேசுதல், வாசித்தல் தேர்வில் முறையே 10 புள்ளிகள் அடிப்படையில் 30 புள்ளிகள் வழங்கப்படும். எழுத்துத்தேர்வுக்கு 70 புள்ளிகளும் வழங்கப்படும். புலன் மொழித் தேர்வில் மயக்க ஒலிகளுக்கு கவனம் செலுத்தப்பட்டு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. சிறுவர்களுக்கான படம்பார்த்துப் பேசுதல் தேர்வில் தமது வாழிட மொழியில் பேசுவது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதற்குரிய தமிழ்ச்சொல்லை ஆசிரியர் திரும்பக் கேட்கவேண்டும். அத்துடன் வடமொழிச் சொற்கள் மற்றும் பிறமொழிச் சொற்களும் ஏற்புடையதல்ல. புலன்மொழித்தேர்வில் 11 ஆம் 12 ஆம் வகுப்புகளுக்கு பேசுதலும் வாசித்தலும் மட்டுமே. கேட்டல் பகுதி இல்லை. இந்த இரு வகுப்புகளுக்கும் 20 புள்ளிகள் வழங்கப்பட்டு, எழுத்துத் தேர்வுக்கு 80 புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

அனைத்துலக எழுத்துத் தேர்வு

கேட்டல், பேசுதல், வாசித்தல் ஆகிய மூன்று திறன்களையும் புலன்மொழிவளத் தேர்வு மூலம் நிறைவு செய்த பிள்ளைக்கு எழுதுதல் திறனாக எழுத்துத் தேர்வு அமைகின்றது. எழுத்துத் தேர்வு 12 நாடுகளுக்கும் ஒரே நாளில் அதாவது ஆனிமாதம் முதல் சனிக்கிழமை நடைபெறுகின்றது. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் தேர்வுத்தாள்கள் அணியஞ் செய்யப்பட்டு அனைத்து நாடுகளிலுமுள்ள கல்விக்கழகங்களுக்கும் மே மாத இறுதியில் அனுப்பி வைக்கப்படும்.

கல்விக் கழகங்கள் தேர்வினை நடாத்தி மாணவர்களின் விடைத்தாள்களை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கின்றன. அனைத்து நாடுகளிலிருந்தும் வகுப்பு நிலைக்கேற்ப ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தப்படும்.

ஒரு நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அந்த நாட்டு விடைத்தாள்கள் திருத்த வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு விடைத்தாளும் வெவ்வேறு ஆசிரியர்களால் மூன்று முறை திருத்தப்படும்.

தேர்வுப் பெறுபேறுகள் ஆகத்து மாத இறுதியில் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். ஒக்ரோபர் – நவம்பர் காலப்பகுதிகளில் பெறுபேறுகளுக்கான சான்றிதழ்கள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் வழங்கப்படும்.

பட்டயக் கல்வி

நோக்கம்

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பாடநூல்களைப் பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு அவற்றின் உள்ளடக்கத்தைப்பற்றிய விரிவான அறிவை வழங்குவது.

வளர் தமிழ் 12 இனை நிறைவு செய்த மாணவர்களின் தமிழ்மொழி அறிவை மேலும் வளர்த்தெடுப்பது.

இனிவரும் தலைமுறையினருக்குக் கற்பிக்கக் கூடிய வளமான இளம் ஆசிரியர்களாக எமது மாணவர்களை உருவாக்குவது.

ஈராண்டுக்கற்கை நெறி

மொழியின்றேல் இனமில்லை’ என்பதையறிந்து, எம்மினம் தாழ்ந்துவிடக்கூடாது என்ற உயரிய நோக்குடன் உருவாக்கப்பட்ட கற்கைநெறிதான் பட்டயக்கல்வி. புலம்பெயர்நாடுகளில் இரண்டாம், மூன்றாம் மொழியாகவுள்ள தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். தம்மிடம் உள்ள, தமக்குக் கிடைத்த வளத்தைக்கொண்டே தமிழைப் புலம்பெயர்தேசத்தில் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமுடைய போற்றுதற்குரிய சிற்பிகள் எனலாம். இவர்களுடைய ஆசிரியவளத்தை மேம்படுத்துவதற்கும் வளர் தமிழ் நூல்களில் உள்ள பாடங்களின் ஆழத்தைத் தெளிவாகக் கற்பிக்கும் ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்குமென தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் இப்பட்டயக்கல்வி ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் பேரவையின் பாடநூல்களிலுள்ள பாடத்திட்டத்துடனான உயர்நிலைக் கல்வியாகவும் இப்பட்டயக்கல்வி அமைந்துள்ளது. வளர் தமிழ்ப்பாடநூல்களில் காணப்படுகின்ற இலக்கியம், கலை, பண்பாட்டு விழுமியங்களையும் இலக்கணம், வரலாறு என்பவற்றையும் ஆழ ஊடுருவி அறிந்து கற்பதற்கும் கற்பித்தலுக்கும் பட்டயக்கல்வி பெரிதும் உதவுகின்றது. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினாலேயே பட்டயக்கல்விக்கான பாடநூல்கள் தகுந்த வளஅறிஞர்களினால் ஆக்கப்பட்டுள்ளன. வளர் தமிழ் பாடநூல்களைக்கற்பிக்கின்ற அனைத்து ஆசிரியர்களும் ஆர்வமுள்ள பெற்றோரும் இக்கற்கைநெறியினைத் தொடரலாம்; வயதெல்லை என்ற கட்டுப்பாடு இல்லை. மேலும் எம் இனத்தின் வருங்காலச்சிற்பிகளான வளர் தமிழ் 12ஐக் கற்று முடித்த மாணவர்களும் இதனைக் கற்று தமது மொழிவளத்தைப் பெருக்கிக் கொள்ளவும் தமிழ்மொழியின் ஆழத்தை அறிந்துகொண்டு எதிர்காலத்தில் இடையறாது தமிழைக் கற்பித்து மாணவர்களை வழிநடத்தவும் இப்பட்டயக்கல்வி உறுதுணையாகவுள்ளது.

இவ்விரண்டாண்டுக் கற்கைநெறியானது அதன் ஒவ்வொரு ஆண்டிலும் தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள், வரலாறு, இலக்கணம் என்றமுறையில் சீரிய திட்டமிடலுடன் ஆக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டில் தமிழ்மொழியின் சிறப்பு, அதன் பழைமை, செழுமை, இளமை, முத்தமிழ்ப்பிரிவு என்பவற்றைத் தெரியவைக்கும் ‘தமிழ்மொழி’ என்ற நூலும் தெரிந்தெடுக்கப்பட்ட இலக்கியங்களாகப் ‘பட்டினப்பாலை’, ‘சிலப்பதிகாரத்தின்’ சில காண்டங்கள்,உலகை வென்ற ‘திருக்குறள்’ மூன்று வேறுபட்ட காலங்களில் வாழ்ந்த ‘ஒளவையும் அருந்தமிழும்’, தெவிட்டாத இன்பம் தரும் இலக்கியங்களைக் கவிக்கண்கொண்டு சுவைக்கத்தூண்டும் வகையினைச் கூறும் ‘இலக்கிய நயம்’, ஈழத்தமிழர்களின் இனமான உணர்வையும் மொழிப்பற்றையும் வரலாற்று அறிவையும் ஏற்படுத்தும் வகையில் படைக்கப்பட்ட ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற வரலாற்றுப் புதினம், தமிழ்மொழியின் கட்டமைப்பைப் பேணும் வகையில் தொல்காப்பியம், நன்னூல் என்பவற்றில் செய்யுள் வடிவிலுள்ள இலக்கண நூற்பாக்களை நன்கு விளங்கிக் கொள்ளும் வகையில் இலகுபடுத்தப்பட்ட ‘கற்றல் வளநூல் இலக்கணம்’ என எட்டு நூல்கள் இடம்பெறுகின்றன.

இரண்டாம் ஆண்டில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கழக இலக்கியங்கள் யாவும் கற்பனையல்ல; கட்டுக்கதைகளுமல்ல; அறிவியல்பூர்வமான உயரிய நூல்கள்; உலகப்பரப்பில் எங்கும் இல்லாத நடைமுறை சார்ந்த இலக்கியங்கள்; கல்விப் பரவலாக்கம் என்றவகையில் பெண்கல்வியும் சிறந்து விளங்கியுள்ளது; கழகக் காலத்துப் புலவர்களில் பெண்புலவர்கள் 30பேர் இருந்துள்ளனர்; அவர்கள் நாடாளும் அரசர்களையே நல்வழிப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாகத் திகழ்ந்துள்ளனர் என்னும் தகவல்களைத் தருபவையாக உள்ளன. இவை நானில அமைப்புகளினூடாகத் தமிழ்மக்களின் வாழ்வியல் சார்ந்த அனைத்தையும் எம் கண்முன்னே கொண்டு வருவன. தமிழர்களின் தரவுகளின் களஞ்சியமாகவுள்ள கழக இலக்கியங்கள் பற்றிய பார்வையைத் தேடத்தூண்டும் வகையிலான தொடர்நூல்களுள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களும் அவற்றின் கதைக்களம், பின் முன் நிகழ்வுகள் என கழக இலக்கியங்களில் ‘அகத்திணை’, ‘புறத்திணை ‘ என இரு நூல்களாக இடம் பெறுகின்றன.

மேலும், தமிழ் இலக்கியமானது இடைவெளியற்ற தொடர்ச்சியான செழுமையுடையது என்பதை அறியத்தரும் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற படிக்கப் படிக்கத் தெவிட்டாத உயரிய நூலும் இடம் பெறுகின்றது.

ஐரோப்பியரிடமிருந்து விடுதலை பெற்றும்கூட உரிமைகள் மறுக்கப்பட்டுத் தாழ்நிலையில் இருக்கும் ஈழத்தமிழர் கடந்து வந்த வரலாற்றைக் கூறும் ‘வரலாறு சொல்லும் பாடம்’ என்ற ஆவணநூலும் அமைந்துள்ளது. ஈழத்தமிழர்களின் உண்மையான வரலாற்றை அறியாதவர்கள் கூட முழுமையாகத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு ஒப்பற்ற நூலாகவும் இது இருக்கின்றது.

ஆரியர்களின் சூழ்ச்சியைப் படம் பிடித்துக்காட்டும் ‘ இராவண காவியம் ஓர் அறிமுகம் ‘ என்ற நூலும், இலகுவில் விளங்கிக் கொள்ளவும் கவிச்சுவை நிரம்பியும் காணப்படும் ‘இக்காலக் கவிதைகள்’ என்ற நூலும் மேலும் மேலும் தேடலைத் தூண்டுவனவாக உள்ளன.

உயர் வகுப்புகளிலுள்ள இலக்கணப் பகுதிகளின் கற்பித்தலை இலகுபடுத்தும் நோக்கில் அமைந்த இலக்கணமும் என ஏழு நூல்கள் இரண்டாம் ஆண்டை அழகு செய்கின்றன.

வாழிடச்சூழலில் பல வேலைப்பளுக்களுக்கிடையிலும் தமிழ் ஆசிரியர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திப் பயன்பெற்று வருகின்றனர்.

தேர்வுத்தாள்கள்

அரையாண்டுத் தேர்வு – மாதிரி வினாத்தாள்

கட்டுரை