செயற்பாடுகள்

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் கல்விச் செயற்பாடுகள்

நூல் ஆக்கம்

தமிழ் வள அறிஞர்கள் ஒன்று கூடித் தமிழ்மொழிக் கல்விக்கான பாடத் திட்டத்தை
உருவாக்கி மாணவர்களின் தகுதிநிலைக்கு ஏற்ற வகையிலும் வாழிட நாட்டுக் கல்விக்கு
இணையான கல்வியை உள்ளடக்கியும் பாடப்பரப்புகள் தெரிவு செய்யப்பட்டுப் பாடநூல்கள்
ஆக்கப்பட்டுள்ளன.

தொடங்கிய காலத்தில் இருந்து 14 நாடுகளில் உள்ள கல்விக்கழகங்கள் ஊடாக 500க்கும்
மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் பேரவையுடன் இணைந்து செயற்படத் தொடங்கின.

கல்வி ஆண்டுச் செயற்பாடுகள்

 • யூலை – செப்ரம்பர் : கல்வியாண்டு
  கல்வியாண்டுத் தொடக்கத்தில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மன், பிரான்சு, இங்கிலாந்து, டென்மார்க், நோர்வே, இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன், பெல்சியம், பின்லாந்து, நியுசிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் உள்ள கல்விக் கழகங்கள் அனைத்திற்கும் வளர் தமிழ் பாடநூல்கள் வழங்கப்படும்.
 • அக்டோபர் – நவம்பர் : ஆசிரியர் செயலமர்வு.
  ஒவ்வொரு நாட்டிலிருந்தும் குறிப்பிட்ட தொகை ஆசிரியர்கள் பேரவைப் பணியகத்திற்கு வரவழைக்கப்படுவர். அவர்களுக்குத் தமிழ்வள அறிஞர்களால் கற்பித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்படும். இந்தச் செயலமர்வில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தத்தம் நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பர்.
 • திசம்பர் : அரையாண்டுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் அணியஞ் செய்யப்படுகின்றன.
 • சனவரி : அரையாண்டு வினாத்தாள்கள் யேர்மன், பிரான்சு, இங்கிலாந்து, டென்மார்க், நோர்வே, இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன், பெல்சியம், பின்லாந்து, நியுசிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் உள்ள கல்விக் கழகங்களிற்கு அனுப்பப்படும், தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை அணியஞ் செய்வனவாகவே அரையாண்டு அமையும்..
 • அனைத்துலக மட்டத்தில் அரையாண்டுத் தேர்வு நடாத்தப்படும்.
 • பிப்ரவரி – மார்ச்சு : மாணவர்களின் புலன்மொழி வளத்தை மேம்படுத்தும் நோக்கில் கேட்டல், பேசுதல் வாசித்தல் என்ற அடிப்படையில் புலன்மொழித் தேர்வுக்கு வினாக்கள் அணியஞ் செய்யப்படும்.
 • ஏப்ரல் : யேர்மன், பிரான்சு, இங்கிலாந்து, டென்மார்க், நோர்வே, இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன், பெல்சியம், பின்லாந்து, நியுசிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் உள்ள கல்விக் கழகங்கள் அனைத்திற்கும் புலன்மொழி ஆவணங்கள் அனுப்பப்பட்டு வாய்மொழித் தேர்வுகள் நடாத்தப்படும்.
 • ஏப்ரல் – மே : அனைத்துலகப் பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்களை அணியஞ் செய்தல்.
 • யூன் : யூன் முதற் கிழமையில் யேர்மன், பிரான்சு, இங்கிலாந்து, டென்மார்க், நோர்வே, இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன், பெல்சியம்,பின்லாந்து, நியுசிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வை நடாத்துதல்.

விடைத்தாள் மதிப்பிடல்

 • அனைத்து நாட்டு மாணவர்களின் விடைத்தாள்களும் கல்விக் கழகங்களிலிருந்து பேரவைப் பணியகத்திற்குக் கொண்டு வரப்படும்.
 • ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அந்தந்த வகுப்பு நிலைக்கு உரிய ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவர். விடைத்தாள்கள் யூன், யூலை, ஆகத்து ஆகிய மாதங்களில் மதிப்பிடப்படும்.
 • ஆகத்து இறுதியில் ஒவ்வொரு நாட்டுக்கும் தேர்வின் பெறுபேறுகள் அனுப்பி வைக்கப்படும்.
 • கல்விக் கழகம் வேண்டிக் கொண்டால் குறிப்பிட்ட விடைத்தாள் மீள்மதிப்பீடு செய்யப்படும்.
 • செப்ரம்பர் காலப்பகுதியில் பெறுபேறுகளுக்கு ஏற்ற வகையில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பாடநூல்கள் மீளாய்வு

பேரவையுடன் தொடர்பில் இருக்கின்ற பல்வேறு நாடுகளில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள்
கூறும் கருத்துகளை ஏற்றும் காலத்தின் தேவை கருதியும் எமது வளர் தமிழ் பாடநூல்கள்
தமிழ்வள அறிஞர்களால் மீளாய்வு செய்யப்பட்டு மீள்பதிப்புச் செய்யப்படுகின்றன.